Thursday, June 14, 2007

வேலை ஏய்ப்புத் திட்டம்



வேலையில்லை வேலையில்லை என்றுசொல்லியே!
வீதியிலே அலைகிறது இளைஞர் கூட்டம்
காலையிலே எழுந்தவுடன் வேலைதேடி
களைப்பாக வருவதையே நாளும் கண்டோம்!
சோலையிலே வாழ்கின்ற பறவைபோல
சொகுசாக வாழ்கின்றோர் சிலபேருண்டு
பாலையிலே வாடுகின்ற மரத்தைப்போல
பதரான வாழ்வினையே இவர்கள் கண்டார்.

ஆறய்ந்தாண்டு திட்டங்கள் போட்டபின்னும்
அதிகரிக்கத் தான்கண்டோம் வேலைபஞ்சம்
பதினேழு ஆண்டுகால நேரு ஆட்சி!
பதினேழு ஆண்டுகால இந்திராஆட்சி!
மூன்றாண்டு காலத்தின் மொராஜியாட்சி!
சரண்சிங்கின் வகையாராக்கள் செய்தஆட்சி!
நான்காண்டு காலத்தின் இராஜீவாட்சி!
இத்தனையும் பிரச்சனையை தீர்க்கவில்லை!

இவர்களின் ஆட்சியாலே திட்டத்தாலே!
அதிகரித்து விட்டதையா வேலைபஞ்சம்!
ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்திலே!
லட்சங்கள் நாற்பதேதான் வேலையில்லை!
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்திலே!
இருகோடி எனஉயர கண்டோம்நாமே!
லட்சங்கள் எண்பதுடன் ஐந்துகோடிஎன
திட்டங்கள் ஏழினீலே உயரக்காண்டோம்.

தாய்நாட்டில் வேலையில்லை என்பதாலே
மருத்துவர்கள் அறிஞர்கள் படித்தோரெல்லாம்
தாய்நாடு விட்டகன்று வேலைதேடி
தவிக்கின்ற நிலைகண்டோம் பிழைப்புத்தேடி!
விஞ்ஞான பட்டங்கள் பெற்றோர்கூடட
குமாஸ்தாவின் வேலையினை பார்க்கக் கண்டோம்.
தகுதிக்கு குறைவான வேலைதன்னில்
தவிக்கின்ற நிலைகண்டோம் இங்கேநாளும்.

நாற்பது லட்சம்பேர் ஒவ்வொராண்டும்
கல்வியினை முடித்துவிட்டு வருகின்றார்கள்
நான்குலட்சம் பேர்களுக்கே வேலையுண்டு
நாயாக மற்றோர்கள் அலைதல்வேண்டும்
முப்பத்தந்து லட்சம்பேர் வேலையின்றி
நடுத்தெருவில் அலைவதையே நாளும் கண்டோம்
எப்போதும் பிரச்சனைகள் புரியாமலே
ஏதேதோ காரணமாம் புலம்புகின்றார்.

தொழிற்கல்வி இல்லாத குறையினாலே
தீர்ப்பதற்கு முடியாதாம் வேலை பஞ்சம்!
படித்தோர்கள் அதிகரித்து விட்டதாலே!
முடியாதாம் வேலைபஞ்சம் தீர்ப்பதற்கு
மக்கள் தொகை அதிகரித்து விட்டதாலே!
அதிகரித்து விட்டதுவாம் வேலையின்மை!
மேற்சொன்ன காரணங்கள் உண்மைதானே!
பொய்யான விளக்கங்கள் அறிவோம்பின்னே!

அதிகரித்து விட்டஇந்த பிரச்சனைக்கு
அறியஒரு விளக்கத்தை கேட்டதாலே!
அதிகரித்து விட்டதுவாம் படித்தோர் கூட்டம்!
அதனாலே முடியாதாம் வேலைபஞ்சம்!
சதி செய்து விளக்கத்தை தருகின்றார்கள்
சரியான பாடத்தை கற்பிப்போம் நாம்!
அதிகரிக்க வில்லையது படித்தோர் கூட்டம்
அப்படியே இருக்கிறது இந்நூற்றாண்டில்!

முப்பத்து மூன்றே சதவீதம்தான்(1986)
கற்றோரின் எண்ணிக்கை என்றே கண்டோம்!
எப்போதே இருந்தநிலை இப்போதுமே
இருக்கிறது நிலைமாறா நிலையில்தானே!
பட்டங்கள் பெற்றோர்கள் ஒருசதவீதமே!
படிக்காதோர் பலகோடி பலகோடியே
தப்பேதும் செய்யாமல் ஆட்சி செய்தால்!
தவிர்திருக்க முடியுமே வேலைபஞ்சம்!.

முப்பத்து மூன்றுசதம் பேர்களுக்கே
வேலைதர வக்கற்றுநிலை கெட்ட அரசாங்கமே!
தப்பித்துக் கொள்வதற்கு பொய்கள் சொல்லி
தட்டியே கழிக்கிறது உண்மைதன்னை
எப்படியோ பொய்பேசி விளக்கம் சொல்லி
எந்நாளும் ஆட்சியினை நடத்துகின்றார்
இப்படியும் அப்படியும் கொள்ளைக்கூட்டம்
இருப்பதையே சுரண்டுவதை நாளும் கண்டோம்!


அறுபத்து ஏழுசதம் மக்களுக்கே
அறியாத கல்விதனை அளிப்பதற்கே
அறியதொரு திட்டத்தை தீட்டினால
ஆசிரியப் பயிற்சிபெற்ற பலபேருக்கும்
ஆசிரியப் பணிதன்னைக் கொடுக்கலாமே!
அறியதொரு சாதனையை புரியலாமே!
படித்தோர்கள் அதிகரிக்க வில்லையில்லை!
படிப்பதற்கோ ஏற்றதொரு திட்டமில்லை!.

மக்கள்தொகை அதிகரித்து விட்டதாலே!
மாளாதாம் வேலைபஞ்சம் தீர்ப்பதற்கு
திக்கெல்லாம் மக்கள்தொகை பெருத்ததாலே!
திசைமாறி விட்டதுவாம் திட்டமெல்லாம்!
தக்கதொரு நடவடிக்கை எடுத்திட்டாலும்
தவிர்ப்பதற்கே முடியவில்லை பஞ்சம்
இக்கதையை தான் நாளும் சொல்லிச் சொல்லி
ஏமாற்றி வருகின்றார் ஆட்சியாளர்.

சுதந்திரம் பெற்றபின் உணர்வுப்பத்தி
மும்மடங்கு உயர்வுதனை அடையக்கண்டோம்
சுதந்திரம் பெற்றபின் மக்கள்தொகை
இருமடங்கு உயர்வுதானே எட்டிட்றிங்கு (1986)
மிதந்துவிட்ட பிரச்சனைக்கு தீர்வைக் கேட்டால்
மெய்தன்னை மறைத்துவிட்டு பொய்கள் சொல்லி
விதவிதமாய் வரிப்பணத்தை கொள்ளையிட்டு
வீழ்த்துகின்றார் மக்களினை வறுமைநோக்கி.

மக்கள்தொகை உயர்வுதனை அடைந்ததாலே!
அவர்கள்குறை தீர்ப்பதற்கு திட்டம்வேண்டும்
தக்கதொரு திட்டத்தை தீட்டினாலே
மக்களின் குறைதன்னை தீர்க்கலாமே!
ஆலையிலே துணிகளெல்லாம் தேங்கிநிற்கும்
ஆடையின்றி பலகோடி மக்கள் வாழ்வர்
அனைவருக்கும் துணிவழங்க திட்டமிட்டால்
அதனாலே பலபேர்க்கு வேலையுண்டு.

தொழிற்கல்வி இல்லாத குறையினாலே!
தீர்ப்பதற்கு முடியாதாம் வேலைபஞ்சம்
தொழிற்கல்வி எல்லோர்க்கும் அளிப்பதாலே!
வேலையில்லா பிரச்சனைகள் தீர்ந்திடாது!
தொழிற்கல்வி பெற்றிட்ட எல்லோருக்கும்
தொழில்தொடங்க மூலதனம் வேண்டும்தானே!
வழியினிலே நாய்பெற்ற முழுத்தேங்காய்போல்
அக்கல்வி ஏழைக்கு ஆகிப்போகும்.

பொருப்பற்ற ஆட்சியிலே மக்களெல்லாம்
சிறியதோர் நோய்க்கெல்லாம் பலியாகின்றார்
மருத்துவ வசதிகள் பலபேர்க்கில்லை
மக்களிலே பலபேர்க்கு நோய்களால் தொல்லை
மறுபக்கம் மருத்துவத்தில் பட்டம்பெற்றோர்
வேலையின்றி தவிப்பவர்கள் இங்கேயுண்டு.
திருப்பத்தை ஏற்படுத்த புதியதிட்டம்
திறமையான முன்னேற்றம் இங்கேயில்லை.

(முழுமை பெறவில்லை............)

கேடயம் - வெளியீடு ஜுன் 1986 கவிதையாக்கம்

பொன்னி

(கவிதைச் சிறுகதை)


பனைமரத்து பட்டியென்ற சிற்றூருண்டு!
பசுமையான காட்சிகளே நிறைய வுண்டு.
பக்கத்தில் நீர்நிறைந்த ஏரியுண்டு!
பசுமையான வயல்வெளிகள் எல்லாமுண்டு!
கண்ணே குளிர்ந்துவிடும் காட்சியை கண்டால்
காண்போர்கள் களிப்புடனே செல்வார் நாளும்
தன்மானம் விற்றுவிட்ட பண்ணையாளத்
தனவந்தர் அவ்வூரை ஆட்டி வைத்தார்.

நிலத்தினிலே பயிர்செய்யக் கடனைத்தந்து!
நிலத்தினிலே விளைந்ததெலாம் சொந்தமாக்க!
வளமாக விளைந்ததெலாம் தனக்கேயென்று
களம்நோக்கி வந்திடுவார் கடனை வாங்க!
தூற்றிவிட்ட நெற்பதரே நிலத்தோர் சொந்தம்
பொன்மணிபோல் நெல்மணிகள் அவர்களுக்கேசொந்தம்
சேற்றினிலே பணிசெய்தோர் சோர்ந்து நிற்க
விளைந்துவிட்ட பொருளனைத்தும் வீட்டில் சேர்ப்பார்.

பண்ணையார் வீட்டிற்குப் பக்கத்திலே
பாங்காக ஓர்குடும்பம் இருந்ததாங்கே!
பொன்னன் பொன்னியென கணவன் மனைவி
பொலிவாக வாழ்ந்திட்டார் அங்கே நாளும்
தந்திரமாய் நரிபோல கடனைத்தந்து
நிலத்தினையே ஈடாகப் பெற்றான்பண்ணை
பொலிவாக வாழ்ந்துவந்த அவர்களையே!
பொலிவிழக்கச் செய்துவிட்டான் கடனைத்தந்து!

கடன்தொல்லை தாங்காமல் பொன்னன் செத்தான்
கடன்காரி யாகவேதான் பொன்னி நின்றாள்
பொன்னியவள் முகமதுவே பொன்னாய் மின்னும்
வறுமையிலே வாழ்ப்போய் செம்பாயானாள்
முத்தான ஐந்துபிள்ளை பெற்றபோதும்
கட்டான கட்டழகு கலையவில்லை
கணவனை இழந்துவிட்ட கவலையாலே
கற்பரசி கண்ணகிபோல் கலங்கிப்போனாள்

ஐந்து பிள்ளைகளும் அவளைச் சுற்ற
அலைபட்ட கடலாக மனமுடைந்து
புயலைப்போல் புழுதிபட்டு மனம்கலங்கி
புழுவாகத் துடித்திடுவாள் கடன்தொல்லையால்
கொடுத்த கடன்கேட்பதற்கு சிறிய பண்ணைவந்தான்
கொடுப்பதற்கு இறுதிநாள் குறித்துச்சொன்னான்
கொடுக்கவில்லை என்றாளே குறித்தநாளில்
குடிசையது உனதல்ல எனதேயென்றான்

கடன்பட்ட நெஞ்சமது கலங்கிநிற்க
காலையிலே பெரியபண்ணை வந்தானங்கே
கடன்பட்ட மனமதுவும் மகிழ்ச்சிகொள்ள
கலங்காதே உதவிடுவேன் என்றேசொன்னான்
மாலையிலே வந்தாலே தருவேனென்று
மாளிகைக்கு வாவென்று அழைத்தானவனை
கடன்தீர்க்க வேண்டுமென்ற எண்ணத்தால
கற்பரசி சென்றாளே உதவிகேட்க.

வைத்தகண் வாங்காமல் அவளைப்பார்த்து
வாவென்று உள்ளழைத்தான் அவளைப்பண்ணை
கடன்தீர்க்க வேண்டுமெனில் உந்தன் கற்பை
விலைதீர்க்க வேண்டுமென்றான் பண்ணையாளன்
கற்புடைய பெண்ணவளே கலங்கிப்போனான்
காகிதத்தில் செய்துவிட்ட கப்பலானாள்!
பாவையவள் வெண்கதிரோன் சுடுதல்போல
பார்வையாலே சுட்டெறித்தான் கலங்கிப்போனாள்

வார்த்தையிலே பொலிவுகொண்டு அழைத்ததாலே!
வந்துவிட்டேன் உந்தன்படி ஏறியென்றாள்!
வஞ்சமனம் கொண்டவன்நீ எனத்தெரிந்தால்
வந்துபடி ஏறிவந்து நிற்கமாட்டேன்
நஞ்சுக்கு இரையாகி உயிர்விட்டாலும்
வஞ்சமனம் கொண்டோர்க் கிரையாக மாட்டேன்.
பங்சமெனை வாட்டினாலும் கலங்கமாட்டோன்
அஞ்சாமல் எதிர்த்திடுவேன் இணங்கேனென்றாள்.

வானவில், நவம்பர் 1986.

புறப்படுவோம் புறப்படுவோம் ஒன்றாய் நாமே

அதிகார வர்க்கத்தின் ஆட்சியாலே
அடிமட்டம் ஆவதெல்லாம் மக்கள்வாழ்வே
அறியாமை மடமையினை வளர்த்தே நாளும்
அறியாத மக்களையும் ஏமாற்றியே
அதிகார நாற்காலி பிடித்தவர்கள்
அடிக்கின்ற கொள்ளைக்கு அளவேயில்லை.
அறியாமல் இருக்காதீர் வெற்றிப்பாதை
புறப்படுவோம் புறப்படுவோம் ஒன்றாய் நாமே.

கண்ணாகக் காக்கின்றோம் நாட்டையென்று
கண்ணிலே பொடிமிளகாய் தூவிவிட்டு
கடுக்கின்ற போதினிலே கொள்ளை கொள்ளை
அடிக்கின்ற கும்பலுக்கு முடிவைக்கட்ட
பொன்னான பாரதமே புறப்பட்டாலே
பொடியாகும் அந்நாளே புல்லர்வாழ்வு
கண்ணான மாதருடன் ஆண்கள் சேர்ந்து
புறப்படுவோம் புறப்படுவோம் ஒன்றாய் நாமே!

மக்களாட்சி என்றேதான் சொல்லிச் சொல்லி
மக்களிடம் வாக்குதனை வாங்கி வாங்கி
மக்களினம் வாழ்வதற்கு வழியைக் கேட்டால்!
மக்களினம் அழிவதற்கே திட்டம்போடும்
இக்கால அரசிற்கு முடிவைக்கட்ட
முத்தான பாரதமே புறப்பட்டாயே!
கொத்தாக அழித்திடலாம் அவர்கள் போக்கை!
புறப்படுவோம் புறப்படுவோம் ஒன்றாய் நாமே!

பெய்யிற்கும் புரட்டுக்கும் துணையாய்நின்று
பொன்னான காலத்தை வீணாயாக்கி
மண்ணிற்கு எந்நாளும் சுமையாய் நின்று
மண்ணாக்கி வாழ்கின்றார் ஏழை வாழ்வை
புண்ணான நெஞ்சினிலே விலையேற்றத்தால்
புழுவாக துடிக்கவைப்பார் ஏழைதன்னை
எண்ணியே இன்றே ஓர் முடிவு கட்ட
புறப்படுவோம் புறப்படுவோம் ஒன்றாய்நாமே!

படியாக மக்களின் முதுகைவைத்தே!
பதவியினைப் பெற்றவுடன் உதைத்துத்தள்ளும்
அடியாட்கள் கட்சியிடம் ஆட்சிதந்தால்
அடக்குமுறை ஆட்சிதானே நடக்குமிங்கே!
அடியாத மாடென்றும் படியாதன்றோ!
அறியாமல் இருக்காதீர் வெற்றிப்பாதை!
தடியாடும் ஆட்சிக்கு முடிவுகட்ட
புறப்படுவோம் புறப்படுவோம் ஒன்றாய் நாமே!

வெந்துவிட்ட புண்ணிலே / வேலைப் பாய்ச்சி சீறும்
விலைவாசி ஏற்றத்திற்கோர் அளவேயில்லை
விவசாய பொருட்களின் விலையேற்றம்தான்
விவசாய குடும்பத்தில் தடுமாற்றந்தான்
வறுமையது அவர்களுடன் குடியேற்றம்தான்

முதலாளி ஆட்சிக்கு முடிவைக்கட்ட
புறப்படுவோம் புறப்படுவோம் ஒன்றாய் நாமே!

பொறுப்பற்ற கட்சிக்கு ஆட்சிதந்தால்
பெரும்பதவி கிடைத்தவுடன் மறந்தேபோகும்
தெருப்பக்கம் அலைகின்ற நாய்கள் தன்னை
தேடிவந்து ஆட்சிக்கு அமர்த்திவிட்டோம்.
வெறுமைக்கும் உண்மைக்கும் விளக்கம் காணா
வேதனையால் காண்கின்றோம் துன்பமன்று!
பொறுப்பற்ற ஆட்சிக்கு முடிவைக்கட்ட
புறப்படுவோம் புறப்படுவோம் இன்றாய் நாமே!

வேலிகளே பயிர்களை மேய்வதாலே!
வேதனையில் மூழ்குகிறது மக்கள் கூட்டம்
போலிகளும் புரட்டுகளும் ஆளவதாலே
போகிறது பாரதமே அழிவை நோக்கி
போலியல்ல புனைவல்ல உண்மையுண்மை
போராட்டம் ஒன்றேதான் முடிவைக்கானும்
காலிகளின் ஆட்சிக்கு முடிவைக்கட்ட
புறப்படுவோம் புறப்படுவோம் ஒன்றாய் நாமே!

- வானவில், டிசம்பர் 1986

1.அறிவியலா? அற்புதமா?

(எனது வானொலி ஒலிபரப்புக் கவிதையிலிருந்து)

1.அந்தரத்தில் உலவிவரும் உலகம் இன்று
அதிசயத்தின் களஞ்சியமாய் மிளிர்தல் கண்டும்,
பந்தைப்போல் சுழன்றுவரும் நிலவை யின்றும்,
பாம்பொன்று விழுங்குவதாய் கதைகள் சொல்வார்.
சந்திரனும் பூவுலகும் ஒன்றுக் கொன்று
சரிநேராய் நேர்க்கோட்டில் செல்லும் போது
கதிரொளிகள் மறைப்பு தனைபாம்பு என்று
பகன்றிட்டால் சிறுவர்களும் நகைப் பாரன்றோ!

2.சந்திரனில் ராக்கெட்டில் பயணம் செய்தோர்ர்
செவ்வாய்க் கோள் வியாழனையும் கடந்தே இன்று
நெடுந்தூர கோளொன்று புளுட்டோ நோக்கி,
நெடுநாளாய் வாயேஜர் பயணம் அன்று,
அறிவியலின் வளர்ச்சியினால் கணிப்பொறிகள்,
அற்புதங்கள் நிகழ்த்திவரும் காலப்போக்கில்,
மொழிபெயர்ப்பு இசையமைப்பு கணிப்பொறிகள்,
இக்கால அறிவியலுக் கோர் எடுத்துக்காட்டு.

3.விண்கலங்கள் அனுப்பிவைத்த புகைப் படங்கள்
விளம்புகின்ற பலவுண்மை அறிந்த போதும்!
விண்ணுலகில் தேவர்களும் வாழ்வதாக
விளக்குகின்ற பேரெல்லாம் அறிவுப்பேதை!
சொற்கலவை உவமையுடன் இனிமை சேர்த்து
கற்பனையாய் கதைகளையே எழுதிக்காட்டி!
பற்பலவாய் அறியாமைக் கதைகள் சொல்லும்
அறிவிலிகள் செயலினையே காலம் வெல்லும்!.

4.நீண்டதொரு காவியுடை அணிந்தே நின்று
நெடுநீள பட்டையுடன் கொட்டை கட்டி!
பிறவியெனும் நெடுங்கடலை நீந்திச் செல்ல
பொடிநடை யாய்தலந் தோரும் முக்தித்தேடி!
மண்டியிட்டு தரைபுரண்டு நீண்ட தூரம்,
இல்லாத சொர்க்கத்தை தேடித்தேடி!
எங்கெங்கோ இந்நாட்டில் பயணம் செய்வார்
வெளிப்படை யாய்செல்வ தானால் வெட்கக்கேடு!

2.மறைவாக நமக்குள்ளே!!

மூடநம்பிக்கைகள் குறித்து - எனது வானொலி ஒலிபரப்புக் கவிதையிலிருந்து


மறைவாக நமக்குள்ளே பேசிவரும் பழங்கதைகள்!
புரையோடி இருக்கின்ற சமுதாயப்பேதமைகள்!
அணியாக நமக்கெல்லாம் ஆறறிவு இருந்தாலும்,
பிணியாக அறியாமை பின்தொடரும் நிலைதானே!
அறிவான செய்தியெல்லாம் ஆயிரங்கள் நிறைந்திருக்க!
அறிவற்ற பழங்கதையின் ஆதிக்கம் அழிப்பதற்கு!
தெளிவான அறிவாலே காரணத்தை சிந்தித்தால்!
இனியெனும் நமக்கெல்லாம் இனிதான முடிவாகும்.-1

விண்ணுலகில் சுற்றுகின்ற நிலவின் மேலே!
விடியாமல் ஒருபக்கம் இருட்டாய் உண்டு!
மறுபக்கம் நிறைவான ஒளியைப் பெற்று
மறைந்திருக்கும் இருட்டுக்கு விளக்கம் சொல்லும்!
அதைப்போல அறிவான உலகத்தின் மேல்
அறியாமை இருட்டேதான் நிறைய உண்டு.!
அறிவோடு நாமெல்லாம் சிந்தித் தெங்கும்
அகற்றிடுவோம் அறியாமை பேய்கள் தன்னை.-2.

விரைவாக வளர்ந்து வரும் விஞ்ஞானத்தின்
விளைவாக புதுமைகளை படைக்கக்கண்டும்.
சோதிடமாம் சாதகமாம் கேட்ப்போர்க் கெல்லாம்
சாதகமாய் பொய் சொல்லி ஏய்ப்போர் பேச்சை
பேதமையால் அதை நம்பி காரியத்தை
பெரிதாக தொடங்குகின்ற அறியாமையால்,
காற்றடிக்கும் திசைநோக்கி பறக்குமிந்த
காற்றாடி போல் மன்தன் போலியாவான்.-3

மண்ணுலகில் இருக்கின்ற மதியீனங்கள்
மறைவதற்கு அறிவோடு சிந்திப்போமே!

4. விண்ணுலகில் இருக்கின்ற கிரகமெல்லாம்
விதியாக நம்வாழ்வை தடுக்கும் என்போர்
கண்ணெதிரே உலகத்தை மறந்து விட்டு
காணாத கற்பனையில் பறகின்றார்கள்
மின்னுகின்ற வின்மீன்கள் இவர்கள் வாழ்வில்
விளைவித்த பாதிப்பை எங்கே கண்டார்.
வீணான விளக்கங்கள் வேண்டாங்கே
விரிவான அறிவான விளக்கம் தேவை.- 4.

உயிருள்ள விலங்கினங்கள் இறந்தபின்னால்
உதிர்ந்துவிட்ட எலும்பெல்லாம் வெயிலில்பட்டால்
வெளியாகும் பாஸ்பரசு அய்ந்தாக்சைடு
உருவான ஆக்சைடும் வெப்பக் காற்றால்
எளிதாக தீப்பிடித்து எரிதல் கண்டு
கொள்ளிப்பேய் எனச்சொல்லும் விளக்கமெல்லாம்
கொழுந்துவிட்ட மடமைக்கு விளக்கமாகும்.
தெளிவோடு அறிவோடு சிந்திப்போமே!- 5.

தாவரங்கள் பச்சையத்தை சேர்க்கும்போது
வெளியாகும் வாய்விங்கே உயிர்வாய்வாகும்.
தாவரங்கள் இரவினிலே சுவாசித்திட்டால்
வெளியாகும் கார்பனுடன் இரண்டாக்சைடை
சுவாசித்தால் நமக்கெல்லாம் திணரும்மூச்சு
இரவினிலே உறங்குகின்ற மனிதரெல்லாம்
இக்காற்றை சுவாசித்த விளைவைக் கண்டு
அமுக்குப்பேய் எனச்சொல்லும் விளக்கமெல்லாம்
அறிவிலிகள் சொல்லுகின்ற கதைகள் தானே!

6ஆ. தாவரங்கள் கதிரவனின் ஒளியைப்பெற்று
ஸ்டார்ச் என்ற பச்சையத்தை இலையில் சேர்க்க
வெளியாகும் வாய்விங்கே உயிர்வாய்வாகும்
இரவினிலே தாவரங்கள் சுவாசித்திட்டால்
வெளியாகும் கார்பனுடன் இரண்டாக்சைடை
சுவாசித்தால் நமக்கெல்லாம் திணரும்மூச்சு
இரவினிலே உறங்குகின்ற மனிதரெல்லாம்
இக்காற்றை சுவாசித்த விளைவைக் கண்டு
அமுக்குப்பேய் எனச்சொல்லும் விளக்கமெல்லாம்
அறிவிலிகள் சொல்லுகின்ற கதைகள் தானே!

7. சகுனங்கள் பார்ப்பதையே சடங்காகக் கொண்டவர்கள்!
மடமைக்கு சான்றாக மற்றவர்க்கு இருப்பவர்கள்!
புறப்பட்டு செல்கையிலே பூனையது குறுக்கிட்டால்!
அபாயம் வருவதற்கு அதுவேதான் அறிகுறியாம்!
விதவை ஒருத்தியவள் வீதியிலே நடந்துவந்தால்!
கண்ணில் எதிர்பட்டால் காரியங்கள் நடக்காதாம்!
கண்ணிப்பெண்ணொருத்தி கண்ணெதிரில் நடந்துவந்தால்!
கடிதான காரியங்கள் எளிதாக நடந்திடுமாம்.

9. இருவேறு பெண்ணினங்கள் எதிராக வருவதற்கு!
எதிரான இருவிளக்கம் தருவோரிங்கே!
முன்னுக்கு முரண்பட்ட கொள்கைக்கிங்கே!
முடிவான அறிவான விளக்கமில்லை!
மண்ணின்மேல் மனிதயினம்.....

10. நல்லவர்கள் தம் அறிவால் சிந்திதிட்ட
நல்லறிவைக் கேட்காமல் சுவரின் ஓரம்
பல்லிசொல்லும் பலன்கேட்டு முடிவைச்செய்யும்
பரிதாப அறிவு பெற்ற மனிதரெல்லாம்
வில்லாக வளைந்திருக்கும்வானத் தின்கீழ்
வீணான வாழ்வினைத்தான் நடத்துகின்றார்
செல்லரித்த கொள்கையெல்லாம் உண்மைவாழ்வில்
செல்லாத காசாக ஆகிப்போகும்.

11.உலகத்தில் வாழ்கின்ற உயிர்கட்க்கெல்லாம்
உயிர்விட்டு பிரிந்தபின் உண்டாம் வாழ்க்கை!
சொர்க்கமென நரகமென விளக்கும் பேச்சு
வீணான கற்பனையும் கதையும் ஆகும்!
புரியாத ஒன்றினையே புரிந்ததாக
புதுவிளக்கம் கொடுத்துவிட்டு ஏய்ப்போரிங்கே
இல்லாத ஒன்றினையும் இருக்குமென்றால்
இடித்துரைத்து திருத்துவதும் கடமையன்றோ!

பூங்குன்றாய் அறிவெல்லாம் புகழ்மணக்க
புகழ்பரப்பும் சிந்தனைகள் நிறைந்திருக்க
பிற்போக்கில் முற்போக்காய் இருக்குமிந்த
பின்னடைந்த சமுதாயம் குழப்பக்குட்டை
எண்ணத்தில் மறைந்திருக்கும் பொய்மையெல்லாம்
எடுத்தெரிந்து விட்டால்தான் எதிர்காலத்தில்
மண்ணின்மேல் வாழுகின்ற மனிதரெல்லாம்
மகத்தான சாதனைகள் புரிவாரிங்கே!

3.வேரில் பழுத்த பலா

விதைவைகள் மறுவாழ்வு குறித்து
வானொலி ஒலிபரப்புக் கவிதை
புதுச்சேரி வானொலி நிலையம்
நாள் 22-11-89 நேரம் காலை 8.30 மணி


விதவைகளின் மறுவாழ்வு வேண்டுமென்றால்
வேர்விட்டு தழைத்திருக்கும் கலாச்சார
மாற்றத்தை உலகிங்கு கண்டிடாமல்
நடக்காது விதவைக்கு மறுமணங்கள்
ஆணுக்கு இணையான உரிமைதன்னை
அளிக்காமல் மறுமணத்தின் பேச்சுயெல்லாம்
வீண்பேச்சில் விளைகின்ற பலனேயன்றி
விடுதலை அவர்களுக்கு வழிகோலாது.

பெண்ணிற்கு மறுமணத்தை மறுத்துவிட்டு
அடிமைகளாய் அவர்களையே நடத்தியிங்கு
ஆண்மட்டும் மறுமணங்கள் புரிவதென்றால்
அதுஎன்ன தனியுரிமை இவர்களுக்கு
மண்ணுலகில் இருக்கின்ற மனிதருள்ளே
சரிபாதி பெண்ணினங்கள் இருந்தபோதும்
பெண்ணுரிமை தனைமட்டும் மறுப்பதற்கு
மண்ணுலகில் எவருக்கும் உரிமையில்லை.

பெண்ணுரிமை என்றிட்டால் புதிதாயில்லை
ஆணுக்கு இணையான உரிமைதன்னை
மண்ணுலகில் மனிதர்களின் உரிமையெல்லாம்
பெண்ணுக்கும் வேண்டுமென கேட்பதற்கே
பெண்ணுரிமை எனவழங்கு கின்றோம் நாமே!
அடிப்படையில் தேவையான உரிமையன்று
உலகத்தின் இல்லாத உரிமைதன்னை
அவர்களுக்கே வேண்டுமென கோரவில்லை.

விலங்கினிலும் கீழாக பெண்ணினத்தை
வெளியுலகு செல்லாமல் அடைத்துவைத்து
விதித்திருக்கும் தடைகளையே உடைத்தெரிந்து
வெளிவந்து புதியதொரு சமுதாயத்தை
வளர்ப்பதற்கு பெண்ணினங்கள
தனியாக இல்லாமல் அமைப்பாய்சேர்ந்து
அணிதிரண்டு ஒற்றுமையாய் கொடுமைதன்னை
எதிர்ப்பதுவே விடுதலைக்கு வழிவகுக்கும்.

ஆணுக்கு சொத்துரிமை இருப்பதாலே
அவர்களுக்கே மறுமணங்கள் செய்கின்றார்கள்
பெண்ணிற்கு உரிமையெலாம் சட்டத்தில்தான்
நடைமுறையில் சமுதாய வழக்கம்தன்னில்
பெண்ணிற்கு அடிப்படையில் உரிமையில்லை
சொத்துடமை சமுதாயம் என்பதாலே
கண்ணான பெண்ணினத்தை புறக்கணித்தல்
கடமையினை புறக்கனித்த செயலேயாகும்.

முன்னேறிய எந்தவொரு நாட்டில்கூட
ஆணுக்கு இணையான உரிமைதன்னை
பெண்ணுக்கு ஒருபோதும் வழங்கவில்லை
உடற்கூரை அடிப்படையாய் வைத்துமட்டும்
பெண்ணினத்தை அடிமைகளாய் நடத்தலிங்கு
பெரியதொரு தவறான செயலேயாகும்.
பெண்களையே அடிமைகள்போல் நடத்தலிங்கு
அறியாமை செயலன்றி வேறேயில்லை.

ஆணிங்கு கொண்டிருக்கும் உரிமையெல்லாம்
அனுகூலம் சௌகரியம் வசதியெல்லாம்
ஆணினங்கள் ஏற்படுத்திக் கொண்டதன்றி
இயற்கையிலே உள்ளதொரு உரிமையில்லை.
இயல்பான பெண்ணுடைய பலகீனத்தை
இவர்களுமே பயன்படுத்தி கொண்டதாலே
இருக்கின்ற பெண்களெலாம் அடிமையாக
இருப்பதையே இங்கே நாம் காண்கின்றோமே!

சதியென்ற பழங்கால மடமையொன்று
சமீபத்தில் அரங்கேறிய நிகழ்ச்சியெல்லாம்
மதிகெட்ட சமுதாய வழக்கமின்றும்
மண்ணுலகின் மீதிருக்கும் சான்றுகூறும்
புதியதொரு சமுதாய மாற்றம்காண
பெருகிவரும் இளைஞரெலாம் ஒன்றுசேர்ந்து
கொதித்தொழுந்து புறப்பட்டு வந்திட்டாலே!
கொடுமையினை அழித்தொழித்து வெல்வோம் நாமே!.

கணவனை இழந்துவிட்ட காரணத்தால்
கடைசிவரை கைம்பெண்ணாய் இருப்பதற்கு
சமுதாயம் வகுத்துவைத்த நியதியெல்லாம்
சாக்கடையில் தூக்கியேநாம் எறிந்துவிட்டு
பெண்ணினங்கள் உணர்வினையே புரிந்துகொண்டு
புதியதொரு வாழ்விற்கு செல்வதற்கு
இளைய சமு தாயமிங்கு வருதல்வேண்டும்
இனிமையான புதுஉலகு படைப்பதற்கு.

பொன்விலங்கு பெண்ணிற்கு பூட்டிவிட்டு
பட்டுவலை பெண்ணின்மேல் வீசிவிட்டு
வீட்டினிலே அடைத்துவைக்கும் காலப்போக்கை
விட்டொழித்து வீசியதை ஏறிந்துவிட்டு
புதியதொரு சமுதாயப் புரட்சிகான
பொங்கியெழு பெண்களின் சமுதாயமே!
போக்கிடுங்கள் அடிமைத்தள சமுதாயத்தை
அடக்கிடுங்கள் வீணர்களின் செயலையன்று.

கல்வியினை பெண்களுக்கு மறுத்துவிட்டு
கண்ணில்லா குரடர்களாய் வளர்த்ததாலே!
வல்லமையும் அறிவினையும் திறமைதன்னை
வீட்டினிலே அடக்கிவைத்து முடக்கிவைத்தார்
பல்வேறு வகைப்பட உரிமைதன்னை
பரிகொடுத்த பெண்களெல்லாம் ஒன்றுசேர்ந்து
கல்லாமை இருள்நோயை விலக்கிவிட்டால்
காலமது எதிர்காலம் பிரகாசமாம்!.

பிறந்தமுதல் பெண்களெலாம் தந்தை கூர்ந்து
திருமணத்தின் பின்னாலே கணவன் சாந்து
இறுதியிலே தான்பெற்ற மகனைச் சார்ந்து
இருக்கின்ற சார்பான வாழ்வு நீங்கி
சுயமாக தன்நிலையில் நிற்பதே தான்
சரியான சுதந்திரத்தின் வழியைக் கானும்
எந்தவொரு சூழலிலும் பெண்களெல்லாம்
எப்போதும்சுதந்திரமாய் இருத்தல் வேண்டும்.

பெருகிவரும் பத்திரிகை வெளியீடெல்லாம்
பெரிதாக பெண்ணுரிமை போற்றவில்லை
பெருக்கிவிட்டு வீட்டினிலே கோலமிட்டு
பேணியதை அழகாக பாதுகாத்து
நகையுடனடே அலங்கரித்து உடையுடுத்தி
மையிட்டு பொட்டிட்டு வீட்டிற்களிளே
அடங்கியேதான் வாழ்வதற்கு வழியைச் சொல்லும்
வெளியீடும் பத்திரிகை கொஞ்சமில்லை!.

கட்டிலுக்கு துணையாக பெண்ணைமட்டும்!
கருதுகின்ற காலத்தை அழித்துவிட்டு
தொட்டிலாட்டி குழந்தைகளை தாலாட்டியே!
வளர்ப்பதற்கு இருக்கின்ற இயந்திரமாய்
மட்டிலுமே அவர்களைநாம் கருதலிங்கு!
மடமையான செயலன்றி வேறேயில்லை!
விட்டொழித்து வீசியதை எறிந்துவிட்டு
பெண்களுடைய விடுதலைக்கு வழிகோலுங்கள்!.

கடைந்தெடுத்த மடமையினை பாடையேற்றுவோம்!
கண்மூடிப் பழக்கத்தை சிறைப்படுத்துவோம்!
மடமைக்கு துணைபோகும் செயலையெல்லாம்
மண்மூடி போகின்ற காலம்பார்ப்போம்!
ஆணுக்கு பெண்ணிங்கே அடிமையில்லை
ஆதிக்க திணிப்பினையே எதிர்ப்போமின்று
வீணுக்கு பேசுகின்ற விளைவின்றியே
விண்ணதிர முழக்கங்கள் செய்வோமின்று!.

கண்ணுக்கு முன்னாலே காட்சிக்குதிரைமூடி
எண்ணத்தில் திரைதன்னை எடுத்தெரிந்துவீசாமல்
பெண்ணுக்கு எதிராக பெண்ணிங்கு இருந்திட்டால்
என்றைக்கும் இயலாது பெண்ணுக்கு மறுமணங்கள்
பெண்ணுக்கு எதிராக பெண்ணிருக்கும் நிலைமாற்றம்
விதவைகளின் வாழ்வுக்கு விடியலாய் அமைந்துவிடும்.
எண்ணத்தின் கொதிப்பெல்லாம் எடுத்திங்கே இயல்பிவிட்டேன்
ஏற்றமிகு முன்னேற்றம் எதிர்பார்த்து முடிக்கின்றேன்.

Saturday, March 03, 2007

வியர்வையைக் குறித்தொரு விசாரணை

வானொலி ஒலிபரப்புக் கவிதை
புதுச்சேரி நிலையம், நாள் 11-6-93 காலை 7.30

வானுயர்ந்த மரங்கள்
புன்னகை சிந்தும்
வயல் வெளிகள்
பூத்துக் குலுங்கும்
பசுஞ்சோலைகள்....

இவை ஒவ்வொன்றின்
பின்னும் எத்தனை
மனித உழைப்புகள் இங்கே
மறைந்து கிடக்கின்றன

காடுகளை கழனிகளாய்க்கியதும்
மலைகளைப் பிளந்து
விளை நிலங்களாக்கியதும்
மனித உழைப்பின்
மகத்துமல்லவா... ஆம்

மனிதனின் ஒவ்வொரு
படைப்பின் பின்னும்
அவனது வியர்வைச்
சுவடுகள் பதிந்துத்தான் கிடக்கின்றன.

உழைத்துக் களைத்து
ஓய்ந்து போனவனின்
வியர்வையைக் குறித்துத்தான்
இங்கு ஒரு வியர்வை
ஆராய்ச்சி நடத்தப்போகிறோம்.

அவனது படைப்புகளில்
பதிந்த வியர்வைச்
சுவடுகளைப் பற்றித்தான்
ஒரு கவிதை ஆராய்ச்சி
நடத்தப்போகிறோம்

வியர்வையைக் குறித்தொரு விசாரணை
உழைப்பவன் சிந்தும்
வியர்வையைக் குறித்துதான்
இங்கு ஒரு விசாரணை நடத்தப்போகிறோம்.

உழவனுக்கு உணவுயில்லை
உழைப்பவனுக்கோ நிம்மதியில்லை
நெசவாளிக்கு உடையில்லை
வீடு கட்டுபவனுக்கோ இங்கு வீடு இல்லை
ஏனிந்த அவலம்.

இந்த அவலங்கள்
அவன்
வாழ்வினையும்
உணர்வினையும்
அலங்கோலப்படுத்தியிருக்கிறது.

வாழ்க்கையின் இந்த
அலங்கோலங்கள்
அன்றாட நிகழ்ச்சிகளாகிப்போயின.

Friday, March 02, 2007

Wednesday, September 20, 2006

test

சோதனை ஓட்டம்