Saturday, March 03, 2007

வியர்வையைக் குறித்தொரு விசாரணை

வானொலி ஒலிபரப்புக் கவிதை
புதுச்சேரி நிலையம், நாள் 11-6-93 காலை 7.30

வானுயர்ந்த மரங்கள்
புன்னகை சிந்தும்
வயல் வெளிகள்
பூத்துக் குலுங்கும்
பசுஞ்சோலைகள்....

இவை ஒவ்வொன்றின்
பின்னும் எத்தனை
மனித உழைப்புகள் இங்கே
மறைந்து கிடக்கின்றன

காடுகளை கழனிகளாய்க்கியதும்
மலைகளைப் பிளந்து
விளை நிலங்களாக்கியதும்
மனித உழைப்பின்
மகத்துமல்லவா... ஆம்

மனிதனின் ஒவ்வொரு
படைப்பின் பின்னும்
அவனது வியர்வைச்
சுவடுகள் பதிந்துத்தான் கிடக்கின்றன.

உழைத்துக் களைத்து
ஓய்ந்து போனவனின்
வியர்வையைக் குறித்துத்தான்
இங்கு ஒரு வியர்வை
ஆராய்ச்சி நடத்தப்போகிறோம்.

அவனது படைப்புகளில்
பதிந்த வியர்வைச்
சுவடுகளைப் பற்றித்தான்
ஒரு கவிதை ஆராய்ச்சி
நடத்தப்போகிறோம்

வியர்வையைக் குறித்தொரு விசாரணை
உழைப்பவன் சிந்தும்
வியர்வையைக் குறித்துதான்
இங்கு ஒரு விசாரணை நடத்தப்போகிறோம்.

உழவனுக்கு உணவுயில்லை
உழைப்பவனுக்கோ நிம்மதியில்லை
நெசவாளிக்கு உடையில்லை
வீடு கட்டுபவனுக்கோ இங்கு வீடு இல்லை
ஏனிந்த அவலம்.

இந்த அவலங்கள்
அவன்
வாழ்வினையும்
உணர்வினையும்
அலங்கோலப்படுத்தியிருக்கிறது.

வாழ்க்கையின் இந்த
அலங்கோலங்கள்
அன்றாட நிகழ்ச்சிகளாகிப்போயின.

Friday, March 02, 2007