Thursday, June 14, 2007

3.வேரில் பழுத்த பலா

விதைவைகள் மறுவாழ்வு குறித்து
வானொலி ஒலிபரப்புக் கவிதை
புதுச்சேரி வானொலி நிலையம்
நாள் 22-11-89 நேரம் காலை 8.30 மணி


விதவைகளின் மறுவாழ்வு வேண்டுமென்றால்
வேர்விட்டு தழைத்திருக்கும் கலாச்சார
மாற்றத்தை உலகிங்கு கண்டிடாமல்
நடக்காது விதவைக்கு மறுமணங்கள்
ஆணுக்கு இணையான உரிமைதன்னை
அளிக்காமல் மறுமணத்தின் பேச்சுயெல்லாம்
வீண்பேச்சில் விளைகின்ற பலனேயன்றி
விடுதலை அவர்களுக்கு வழிகோலாது.

பெண்ணிற்கு மறுமணத்தை மறுத்துவிட்டு
அடிமைகளாய் அவர்களையே நடத்தியிங்கு
ஆண்மட்டும் மறுமணங்கள் புரிவதென்றால்
அதுஎன்ன தனியுரிமை இவர்களுக்கு
மண்ணுலகில் இருக்கின்ற மனிதருள்ளே
சரிபாதி பெண்ணினங்கள் இருந்தபோதும்
பெண்ணுரிமை தனைமட்டும் மறுப்பதற்கு
மண்ணுலகில் எவருக்கும் உரிமையில்லை.

பெண்ணுரிமை என்றிட்டால் புதிதாயில்லை
ஆணுக்கு இணையான உரிமைதன்னை
மண்ணுலகில் மனிதர்களின் உரிமையெல்லாம்
பெண்ணுக்கும் வேண்டுமென கேட்பதற்கே
பெண்ணுரிமை எனவழங்கு கின்றோம் நாமே!
அடிப்படையில் தேவையான உரிமையன்று
உலகத்தின் இல்லாத உரிமைதன்னை
அவர்களுக்கே வேண்டுமென கோரவில்லை.

விலங்கினிலும் கீழாக பெண்ணினத்தை
வெளியுலகு செல்லாமல் அடைத்துவைத்து
விதித்திருக்கும் தடைகளையே உடைத்தெரிந்து
வெளிவந்து புதியதொரு சமுதாயத்தை
வளர்ப்பதற்கு பெண்ணினங்கள
தனியாக இல்லாமல் அமைப்பாய்சேர்ந்து
அணிதிரண்டு ஒற்றுமையாய் கொடுமைதன்னை
எதிர்ப்பதுவே விடுதலைக்கு வழிவகுக்கும்.

ஆணுக்கு சொத்துரிமை இருப்பதாலே
அவர்களுக்கே மறுமணங்கள் செய்கின்றார்கள்
பெண்ணிற்கு உரிமையெலாம் சட்டத்தில்தான்
நடைமுறையில் சமுதாய வழக்கம்தன்னில்
பெண்ணிற்கு அடிப்படையில் உரிமையில்லை
சொத்துடமை சமுதாயம் என்பதாலே
கண்ணான பெண்ணினத்தை புறக்கணித்தல்
கடமையினை புறக்கனித்த செயலேயாகும்.

முன்னேறிய எந்தவொரு நாட்டில்கூட
ஆணுக்கு இணையான உரிமைதன்னை
பெண்ணுக்கு ஒருபோதும் வழங்கவில்லை
உடற்கூரை அடிப்படையாய் வைத்துமட்டும்
பெண்ணினத்தை அடிமைகளாய் நடத்தலிங்கு
பெரியதொரு தவறான செயலேயாகும்.
பெண்களையே அடிமைகள்போல் நடத்தலிங்கு
அறியாமை செயலன்றி வேறேயில்லை.

ஆணிங்கு கொண்டிருக்கும் உரிமையெல்லாம்
அனுகூலம் சௌகரியம் வசதியெல்லாம்
ஆணினங்கள் ஏற்படுத்திக் கொண்டதன்றி
இயற்கையிலே உள்ளதொரு உரிமையில்லை.
இயல்பான பெண்ணுடைய பலகீனத்தை
இவர்களுமே பயன்படுத்தி கொண்டதாலே
இருக்கின்ற பெண்களெலாம் அடிமையாக
இருப்பதையே இங்கே நாம் காண்கின்றோமே!

சதியென்ற பழங்கால மடமையொன்று
சமீபத்தில் அரங்கேறிய நிகழ்ச்சியெல்லாம்
மதிகெட்ட சமுதாய வழக்கமின்றும்
மண்ணுலகின் மீதிருக்கும் சான்றுகூறும்
புதியதொரு சமுதாய மாற்றம்காண
பெருகிவரும் இளைஞரெலாம் ஒன்றுசேர்ந்து
கொதித்தொழுந்து புறப்பட்டு வந்திட்டாலே!
கொடுமையினை அழித்தொழித்து வெல்வோம் நாமே!.

கணவனை இழந்துவிட்ட காரணத்தால்
கடைசிவரை கைம்பெண்ணாய் இருப்பதற்கு
சமுதாயம் வகுத்துவைத்த நியதியெல்லாம்
சாக்கடையில் தூக்கியேநாம் எறிந்துவிட்டு
பெண்ணினங்கள் உணர்வினையே புரிந்துகொண்டு
புதியதொரு வாழ்விற்கு செல்வதற்கு
இளைய சமு தாயமிங்கு வருதல்வேண்டும்
இனிமையான புதுஉலகு படைப்பதற்கு.

பொன்விலங்கு பெண்ணிற்கு பூட்டிவிட்டு
பட்டுவலை பெண்ணின்மேல் வீசிவிட்டு
வீட்டினிலே அடைத்துவைக்கும் காலப்போக்கை
விட்டொழித்து வீசியதை ஏறிந்துவிட்டு
புதியதொரு சமுதாயப் புரட்சிகான
பொங்கியெழு பெண்களின் சமுதாயமே!
போக்கிடுங்கள் அடிமைத்தள சமுதாயத்தை
அடக்கிடுங்கள் வீணர்களின் செயலையன்று.

கல்வியினை பெண்களுக்கு மறுத்துவிட்டு
கண்ணில்லா குரடர்களாய் வளர்த்ததாலே!
வல்லமையும் அறிவினையும் திறமைதன்னை
வீட்டினிலே அடக்கிவைத்து முடக்கிவைத்தார்
பல்வேறு வகைப்பட உரிமைதன்னை
பரிகொடுத்த பெண்களெல்லாம் ஒன்றுசேர்ந்து
கல்லாமை இருள்நோயை விலக்கிவிட்டால்
காலமது எதிர்காலம் பிரகாசமாம்!.

பிறந்தமுதல் பெண்களெலாம் தந்தை கூர்ந்து
திருமணத்தின் பின்னாலே கணவன் சாந்து
இறுதியிலே தான்பெற்ற மகனைச் சார்ந்து
இருக்கின்ற சார்பான வாழ்வு நீங்கி
சுயமாக தன்நிலையில் நிற்பதே தான்
சரியான சுதந்திரத்தின் வழியைக் கானும்
எந்தவொரு சூழலிலும் பெண்களெல்லாம்
எப்போதும்சுதந்திரமாய் இருத்தல் வேண்டும்.

பெருகிவரும் பத்திரிகை வெளியீடெல்லாம்
பெரிதாக பெண்ணுரிமை போற்றவில்லை
பெருக்கிவிட்டு வீட்டினிலே கோலமிட்டு
பேணியதை அழகாக பாதுகாத்து
நகையுடனடே அலங்கரித்து உடையுடுத்தி
மையிட்டு பொட்டிட்டு வீட்டிற்களிளே
அடங்கியேதான் வாழ்வதற்கு வழியைச் சொல்லும்
வெளியீடும் பத்திரிகை கொஞ்சமில்லை!.

கட்டிலுக்கு துணையாக பெண்ணைமட்டும்!
கருதுகின்ற காலத்தை அழித்துவிட்டு
தொட்டிலாட்டி குழந்தைகளை தாலாட்டியே!
வளர்ப்பதற்கு இருக்கின்ற இயந்திரமாய்
மட்டிலுமே அவர்களைநாம் கருதலிங்கு!
மடமையான செயலன்றி வேறேயில்லை!
விட்டொழித்து வீசியதை எறிந்துவிட்டு
பெண்களுடைய விடுதலைக்கு வழிகோலுங்கள்!.

கடைந்தெடுத்த மடமையினை பாடையேற்றுவோம்!
கண்மூடிப் பழக்கத்தை சிறைப்படுத்துவோம்!
மடமைக்கு துணைபோகும் செயலையெல்லாம்
மண்மூடி போகின்ற காலம்பார்ப்போம்!
ஆணுக்கு பெண்ணிங்கே அடிமையில்லை
ஆதிக்க திணிப்பினையே எதிர்ப்போமின்று
வீணுக்கு பேசுகின்ற விளைவின்றியே
விண்ணதிர முழக்கங்கள் செய்வோமின்று!.

கண்ணுக்கு முன்னாலே காட்சிக்குதிரைமூடி
எண்ணத்தில் திரைதன்னை எடுத்தெரிந்துவீசாமல்
பெண்ணுக்கு எதிராக பெண்ணிங்கு இருந்திட்டால்
என்றைக்கும் இயலாது பெண்ணுக்கு மறுமணங்கள்
பெண்ணுக்கு எதிராக பெண்ணிருக்கும் நிலைமாற்றம்
விதவைகளின் வாழ்வுக்கு விடியலாய் அமைந்துவிடும்.
எண்ணத்தின் கொதிப்பெல்லாம் எடுத்திங்கே இயல்பிவிட்டேன்
ஏற்றமிகு முன்னேற்றம் எதிர்பார்த்து முடிக்கின்றேன்.

No comments: