Thursday, June 14, 2007

பொன்னி

(கவிதைச் சிறுகதை)


பனைமரத்து பட்டியென்ற சிற்றூருண்டு!
பசுமையான காட்சிகளே நிறைய வுண்டு.
பக்கத்தில் நீர்நிறைந்த ஏரியுண்டு!
பசுமையான வயல்வெளிகள் எல்லாமுண்டு!
கண்ணே குளிர்ந்துவிடும் காட்சியை கண்டால்
காண்போர்கள் களிப்புடனே செல்வார் நாளும்
தன்மானம் விற்றுவிட்ட பண்ணையாளத்
தனவந்தர் அவ்வூரை ஆட்டி வைத்தார்.

நிலத்தினிலே பயிர்செய்யக் கடனைத்தந்து!
நிலத்தினிலே விளைந்ததெலாம் சொந்தமாக்க!
வளமாக விளைந்ததெலாம் தனக்கேயென்று
களம்நோக்கி வந்திடுவார் கடனை வாங்க!
தூற்றிவிட்ட நெற்பதரே நிலத்தோர் சொந்தம்
பொன்மணிபோல் நெல்மணிகள் அவர்களுக்கேசொந்தம்
சேற்றினிலே பணிசெய்தோர் சோர்ந்து நிற்க
விளைந்துவிட்ட பொருளனைத்தும் வீட்டில் சேர்ப்பார்.

பண்ணையார் வீட்டிற்குப் பக்கத்திலே
பாங்காக ஓர்குடும்பம் இருந்ததாங்கே!
பொன்னன் பொன்னியென கணவன் மனைவி
பொலிவாக வாழ்ந்திட்டார் அங்கே நாளும்
தந்திரமாய் நரிபோல கடனைத்தந்து
நிலத்தினையே ஈடாகப் பெற்றான்பண்ணை
பொலிவாக வாழ்ந்துவந்த அவர்களையே!
பொலிவிழக்கச் செய்துவிட்டான் கடனைத்தந்து!

கடன்தொல்லை தாங்காமல் பொன்னன் செத்தான்
கடன்காரி யாகவேதான் பொன்னி நின்றாள்
பொன்னியவள் முகமதுவே பொன்னாய் மின்னும்
வறுமையிலே வாழ்ப்போய் செம்பாயானாள்
முத்தான ஐந்துபிள்ளை பெற்றபோதும்
கட்டான கட்டழகு கலையவில்லை
கணவனை இழந்துவிட்ட கவலையாலே
கற்பரசி கண்ணகிபோல் கலங்கிப்போனாள்

ஐந்து பிள்ளைகளும் அவளைச் சுற்ற
அலைபட்ட கடலாக மனமுடைந்து
புயலைப்போல் புழுதிபட்டு மனம்கலங்கி
புழுவாகத் துடித்திடுவாள் கடன்தொல்லையால்
கொடுத்த கடன்கேட்பதற்கு சிறிய பண்ணைவந்தான்
கொடுப்பதற்கு இறுதிநாள் குறித்துச்சொன்னான்
கொடுக்கவில்லை என்றாளே குறித்தநாளில்
குடிசையது உனதல்ல எனதேயென்றான்

கடன்பட்ட நெஞ்சமது கலங்கிநிற்க
காலையிலே பெரியபண்ணை வந்தானங்கே
கடன்பட்ட மனமதுவும் மகிழ்ச்சிகொள்ள
கலங்காதே உதவிடுவேன் என்றேசொன்னான்
மாலையிலே வந்தாலே தருவேனென்று
மாளிகைக்கு வாவென்று அழைத்தானவனை
கடன்தீர்க்க வேண்டுமென்ற எண்ணத்தால
கற்பரசி சென்றாளே உதவிகேட்க.

வைத்தகண் வாங்காமல் அவளைப்பார்த்து
வாவென்று உள்ளழைத்தான் அவளைப்பண்ணை
கடன்தீர்க்க வேண்டுமெனில் உந்தன் கற்பை
விலைதீர்க்க வேண்டுமென்றான் பண்ணையாளன்
கற்புடைய பெண்ணவளே கலங்கிப்போனான்
காகிதத்தில் செய்துவிட்ட கப்பலானாள்!
பாவையவள் வெண்கதிரோன் சுடுதல்போல
பார்வையாலே சுட்டெறித்தான் கலங்கிப்போனாள்

வார்த்தையிலே பொலிவுகொண்டு அழைத்ததாலே!
வந்துவிட்டேன் உந்தன்படி ஏறியென்றாள்!
வஞ்சமனம் கொண்டவன்நீ எனத்தெரிந்தால்
வந்துபடி ஏறிவந்து நிற்கமாட்டேன்
நஞ்சுக்கு இரையாகி உயிர்விட்டாலும்
வஞ்சமனம் கொண்டோர்க் கிரையாக மாட்டேன்.
பங்சமெனை வாட்டினாலும் கலங்கமாட்டோன்
அஞ்சாமல் எதிர்த்திடுவேன் இணங்கேனென்றாள்.

வானவில், நவம்பர் 1986.

No comments: