Thursday, June 14, 2007

வேலை ஏய்ப்புத் திட்டம்



வேலையில்லை வேலையில்லை என்றுசொல்லியே!
வீதியிலே அலைகிறது இளைஞர் கூட்டம்
காலையிலே எழுந்தவுடன் வேலைதேடி
களைப்பாக வருவதையே நாளும் கண்டோம்!
சோலையிலே வாழ்கின்ற பறவைபோல
சொகுசாக வாழ்கின்றோர் சிலபேருண்டு
பாலையிலே வாடுகின்ற மரத்தைப்போல
பதரான வாழ்வினையே இவர்கள் கண்டார்.

ஆறய்ந்தாண்டு திட்டங்கள் போட்டபின்னும்
அதிகரிக்கத் தான்கண்டோம் வேலைபஞ்சம்
பதினேழு ஆண்டுகால நேரு ஆட்சி!
பதினேழு ஆண்டுகால இந்திராஆட்சி!
மூன்றாண்டு காலத்தின் மொராஜியாட்சி!
சரண்சிங்கின் வகையாராக்கள் செய்தஆட்சி!
நான்காண்டு காலத்தின் இராஜீவாட்சி!
இத்தனையும் பிரச்சனையை தீர்க்கவில்லை!

இவர்களின் ஆட்சியாலே திட்டத்தாலே!
அதிகரித்து விட்டதையா வேலைபஞ்சம்!
ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்திலே!
லட்சங்கள் நாற்பதேதான் வேலையில்லை!
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்திலே!
இருகோடி எனஉயர கண்டோம்நாமே!
லட்சங்கள் எண்பதுடன் ஐந்துகோடிஎன
திட்டங்கள் ஏழினீலே உயரக்காண்டோம்.

தாய்நாட்டில் வேலையில்லை என்பதாலே
மருத்துவர்கள் அறிஞர்கள் படித்தோரெல்லாம்
தாய்நாடு விட்டகன்று வேலைதேடி
தவிக்கின்ற நிலைகண்டோம் பிழைப்புத்தேடி!
விஞ்ஞான பட்டங்கள் பெற்றோர்கூடட
குமாஸ்தாவின் வேலையினை பார்க்கக் கண்டோம்.
தகுதிக்கு குறைவான வேலைதன்னில்
தவிக்கின்ற நிலைகண்டோம் இங்கேநாளும்.

நாற்பது லட்சம்பேர் ஒவ்வொராண்டும்
கல்வியினை முடித்துவிட்டு வருகின்றார்கள்
நான்குலட்சம் பேர்களுக்கே வேலையுண்டு
நாயாக மற்றோர்கள் அலைதல்வேண்டும்
முப்பத்தந்து லட்சம்பேர் வேலையின்றி
நடுத்தெருவில் அலைவதையே நாளும் கண்டோம்
எப்போதும் பிரச்சனைகள் புரியாமலே
ஏதேதோ காரணமாம் புலம்புகின்றார்.

தொழிற்கல்வி இல்லாத குறையினாலே
தீர்ப்பதற்கு முடியாதாம் வேலை பஞ்சம்!
படித்தோர்கள் அதிகரித்து விட்டதாலே!
முடியாதாம் வேலைபஞ்சம் தீர்ப்பதற்கு
மக்கள் தொகை அதிகரித்து விட்டதாலே!
அதிகரித்து விட்டதுவாம் வேலையின்மை!
மேற்சொன்ன காரணங்கள் உண்மைதானே!
பொய்யான விளக்கங்கள் அறிவோம்பின்னே!

அதிகரித்து விட்டஇந்த பிரச்சனைக்கு
அறியஒரு விளக்கத்தை கேட்டதாலே!
அதிகரித்து விட்டதுவாம் படித்தோர் கூட்டம்!
அதனாலே முடியாதாம் வேலைபஞ்சம்!
சதி செய்து விளக்கத்தை தருகின்றார்கள்
சரியான பாடத்தை கற்பிப்போம் நாம்!
அதிகரிக்க வில்லையது படித்தோர் கூட்டம்
அப்படியே இருக்கிறது இந்நூற்றாண்டில்!

முப்பத்து மூன்றே சதவீதம்தான்(1986)
கற்றோரின் எண்ணிக்கை என்றே கண்டோம்!
எப்போதே இருந்தநிலை இப்போதுமே
இருக்கிறது நிலைமாறா நிலையில்தானே!
பட்டங்கள் பெற்றோர்கள் ஒருசதவீதமே!
படிக்காதோர் பலகோடி பலகோடியே
தப்பேதும் செய்யாமல் ஆட்சி செய்தால்!
தவிர்திருக்க முடியுமே வேலைபஞ்சம்!.

முப்பத்து மூன்றுசதம் பேர்களுக்கே
வேலைதர வக்கற்றுநிலை கெட்ட அரசாங்கமே!
தப்பித்துக் கொள்வதற்கு பொய்கள் சொல்லி
தட்டியே கழிக்கிறது உண்மைதன்னை
எப்படியோ பொய்பேசி விளக்கம் சொல்லி
எந்நாளும் ஆட்சியினை நடத்துகின்றார்
இப்படியும் அப்படியும் கொள்ளைக்கூட்டம்
இருப்பதையே சுரண்டுவதை நாளும் கண்டோம்!


அறுபத்து ஏழுசதம் மக்களுக்கே
அறியாத கல்விதனை அளிப்பதற்கே
அறியதொரு திட்டத்தை தீட்டினால
ஆசிரியப் பயிற்சிபெற்ற பலபேருக்கும்
ஆசிரியப் பணிதன்னைக் கொடுக்கலாமே!
அறியதொரு சாதனையை புரியலாமே!
படித்தோர்கள் அதிகரிக்க வில்லையில்லை!
படிப்பதற்கோ ஏற்றதொரு திட்டமில்லை!.

மக்கள்தொகை அதிகரித்து விட்டதாலே!
மாளாதாம் வேலைபஞ்சம் தீர்ப்பதற்கு
திக்கெல்லாம் மக்கள்தொகை பெருத்ததாலே!
திசைமாறி விட்டதுவாம் திட்டமெல்லாம்!
தக்கதொரு நடவடிக்கை எடுத்திட்டாலும்
தவிர்ப்பதற்கே முடியவில்லை பஞ்சம்
இக்கதையை தான் நாளும் சொல்லிச் சொல்லி
ஏமாற்றி வருகின்றார் ஆட்சியாளர்.

சுதந்திரம் பெற்றபின் உணர்வுப்பத்தி
மும்மடங்கு உயர்வுதனை அடையக்கண்டோம்
சுதந்திரம் பெற்றபின் மக்கள்தொகை
இருமடங்கு உயர்வுதானே எட்டிட்றிங்கு (1986)
மிதந்துவிட்ட பிரச்சனைக்கு தீர்வைக் கேட்டால்
மெய்தன்னை மறைத்துவிட்டு பொய்கள் சொல்லி
விதவிதமாய் வரிப்பணத்தை கொள்ளையிட்டு
வீழ்த்துகின்றார் மக்களினை வறுமைநோக்கி.

மக்கள்தொகை உயர்வுதனை அடைந்ததாலே!
அவர்கள்குறை தீர்ப்பதற்கு திட்டம்வேண்டும்
தக்கதொரு திட்டத்தை தீட்டினாலே
மக்களின் குறைதன்னை தீர்க்கலாமே!
ஆலையிலே துணிகளெல்லாம் தேங்கிநிற்கும்
ஆடையின்றி பலகோடி மக்கள் வாழ்வர்
அனைவருக்கும் துணிவழங்க திட்டமிட்டால்
அதனாலே பலபேர்க்கு வேலையுண்டு.

தொழிற்கல்வி இல்லாத குறையினாலே!
தீர்ப்பதற்கு முடியாதாம் வேலைபஞ்சம்
தொழிற்கல்வி எல்லோர்க்கும் அளிப்பதாலே!
வேலையில்லா பிரச்சனைகள் தீர்ந்திடாது!
தொழிற்கல்வி பெற்றிட்ட எல்லோருக்கும்
தொழில்தொடங்க மூலதனம் வேண்டும்தானே!
வழியினிலே நாய்பெற்ற முழுத்தேங்காய்போல்
அக்கல்வி ஏழைக்கு ஆகிப்போகும்.

பொருப்பற்ற ஆட்சியிலே மக்களெல்லாம்
சிறியதோர் நோய்க்கெல்லாம் பலியாகின்றார்
மருத்துவ வசதிகள் பலபேர்க்கில்லை
மக்களிலே பலபேர்க்கு நோய்களால் தொல்லை
மறுபக்கம் மருத்துவத்தில் பட்டம்பெற்றோர்
வேலையின்றி தவிப்பவர்கள் இங்கேயுண்டு.
திருப்பத்தை ஏற்படுத்த புதியதிட்டம்
திறமையான முன்னேற்றம் இங்கேயில்லை.

(முழுமை பெறவில்லை............)

கேடயம் - வெளியீடு ஜுன் 1986 கவிதையாக்கம்

1 comment:

ச.பிரேம்குமார் said...

வணக்கம்,

புதுவை சேர்ந்த ஒரு சகபதிவரை காண நேர்ந்ததில் மகிழ்ச்சி. புதுவை வலைப்பதிவர்கள் எல்லோரையும் ஒன்று திரட்டி ஒரு கூட்டுப்பதிவு ஆரம்பிக்க வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசை. இது குறித்து மடலாட நேரம் இருப்பின் prem.kavithaigal@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்

நன்றி
பிரேம்குமார்